search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்"

    தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக்கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) கோ. விசயராகவனிடம் வழங்கினார்.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு வசதியாக 9 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்த்தாய் நூல் விற்பனை ஊர்தியின் சேவையை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஊர்தியின் சாவியை வாகன ஓட்டுநருக்கு வழங்கினார்.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட பாடல்கள் மொழிபெயர்ப்பு பணிக்காக தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான நிதி சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

    மொழிபெயர்ப்பு பணிக்காக மதிப்பூதியமாக தலா ரூ.1 லட்சம் காசோலைகளையும், கூர்ந்தாய்வு செய்த குறிஞ்சி வேலனுக்கு ரூ. 12 ஆயிரம் காசோலையையும் வழங்கினார்.

    தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மற்றும் கிள்ளியூர், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஆகிய புதிய வருவாய் வட்டங்களை துவக்கி வைத்தார்.

    விருதுநகர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 11 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்னாளுமை முகமைக்கும், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம், அமெரிக்காவின் விர்ஜினியா கல்வி மற்றும் ஆராய்ச்சி மேலாண் இந்திய தொழில்நுட்ப மையம் மற்றும் பான்டாக் - யுகே இந்தியா இனோவேசன் பண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் அதன் ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே. மிஸ்ரா, பான்டாக் - யுகே இந்தியா இனோவேசன் பண்ட் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் இராமசந்திரன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 2018-19-ம் ஆண்டிற்கான வாழும் கைவினைப் பொக்கி‌ஷம் விருதுகளை 7கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை  10 கைவினைஞர்களுக்கும், பட்டுவளர்ச்சித் துறை சார்பில் மாநில அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்குபரிசுத் தொகையும் வழங்கி கவுரவித்தார்.
     
    அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.  #TNGovt #EdappadiPalaniswami
    ×